மச்சானுக்கு ஒரு மடல் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

மச்சானுக்கு ஒரு மடல் !













நிக்காஹ் முடிஞ்சு முழுசா ஒரு
முப்பது நாள் கூட ஆகலையே

உடனே புறப்பட்டு வரணும்முன்னு
கம்பெனி தகவல் மட்டும் வந்தேருச்சே

மனசுல கற்பனை கோட்டை கட்டி
வச்சேன் நெனப்பு மட்டும் உங்க மேல

ஏரோப்ளேன் மேல ஏறி மச்சான்
மைதீன்கண்ணு நீங்க பறந்திட்டீங்க

பாலை மணல் தேசத்திலே வேகும்
உங்க உள் மனசு வேதனை எல்லாம்

இங்கே தேடி உங்கள நெனைச்சு தினம்
என் கண்கள் ரெண்டும் குளமாச்சு

காசு தேடி சுடு மணலிலே நீங்க 
இனிகனவெல்லாம் நம்ம எதிர்காலம்

நிறைவாக நான் தொழுது தினம் அந்த
நாயனிடம் வேண்டி கேட்டிடுவேன்

கண் நிறைஞ்ச மச்சான தந்த ரப்புக்கு
நீயத்து வச்சு மூணு நோன்பு இருந்தேன்

மரியம் கொழுந்தியா வெகு நாளா
வீட்டில் இருக்கா நிக்காஹ்வுக்கு

நிறைவாக திருமணம் பண்ண நீங்க
தொகை ஒண்ணு அனுப்போணும்

கொழுந்தன் ஜமால் மேல் படிப்பு
நெருங்கி வரும் நாள் தூரமில்லை

நெனப்போடு கணக்கா பணம் சேர்த்து
அவங்க நிலமைய நாம உயர்த்தணும்

மாமாவுக்கு வைத்தியம் பண்ண
வைத்யர்கிட்ட போய் வரணும் 

மாமிய போட்டு மொடக்கு வாதம்
பாடாய் படுத்துது தினம் தோறும்

வேதனைய மறந்து வேளைக்கு சாப்பிடுங்க
தொழுகைய தவறாம நின்னு முடிச்சிடுங்க

எங்க அத்தா , உம்மாவும் உம்ரா
செய்ய கசாலி மாமா கூட போறாங்க 

இந்த செய்தி சொல்ல போன் போட்டா
நீங்க எடுத்து பேசிரத்தான் வேண்டாமா ?

வருஷம் ஓடிடும் நீங்க வர்ற நாளை பார்த்து
இன்ஷாஅல்லாஹ் நான் காத்திருப்பேன் !

இக்கரையில் நம்ம உறவுகளோடு என்றும்
காலமெல்லாம் உங்க மனைவி பீர்பாத்து !

குறிப்பு :
தினம் பாலை சுடுமணலில் வேதனைகளை சுமந்து
குடும்பங்களுக்காக வாழும் எனது அருமை உடன்
பிறப்புகளுக்கு  இது சமர்ப்பணம்  !


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்